கவிதை

மறுபக்கம்

மேகங்கள் அற்ற இரவு வானில்

தனித்து எரிந்து கொண்டிருக்கும்

முழு நிலவை

நீர் வெறித்து பார்த்ததுண்டா ?

காற்றை பிரிந்து இலைகளின் உரசலின்றி

அமைதியின் உருவாய் நின்றிருக்கும்

ஆலமரத்தினை

நீர் வியந்து பார்த்ததுண்டா ?

மழை முகில் சூழ்ந்த பகல் பொழுதில்

சிறு பறவையின் சஞ்சாரமுமற்றிருக்கும்

இருண்ட வானத்தினை

நீர் தலை தூக்கி பார்த்ததுண்டா ?

வாடிய மலரென அறியாது இதழ்கள்

இணைத்து மது அருந்த வரும்

பட்டாம்பூச்சியின்

ஏமாற்றத்தை நீர் பார்த்ததுண்டா ?

தானும் ஒரு நாள் மங்கையின் கூந்தலில்

மகுடமாய் சூடப்படுவேன் என காத்துக்கிடக்கும்

கணகாம்பரத்தை

நீர் உற்றுப்பார்த்ததுண்டா ?

இயற்கையின் இக்காட்சிகள்

அதன் சொல்லப்படாத

துயரத்தை உங்களுக்கு

உணர்த்தவும் கூடும்.

இந்நிகழ்வுகள் உங்கள்

ஆழ் மனதில் புதைந்த சோகத்தை

கண் வழியே கண்ணீராய்

காட்டவும் கூடும்.

இது இயற்கையின்

மறுபக்கமாக

இருக்கவும் கூடும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top